Thursday, August 7, 2014

அக்காவின் சாவுக்கு கூட அழ முடியாத பாவி



மாரிச்செல்வம்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மாரியாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.
PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மாஎன்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்கநல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசைஎன்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாருஎன்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்என்றார். சரிக்கா, நீ போய் தூங்குக்காஎன்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டாஎன்று அனைவரும் தேற்றினர். மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.
இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்
O

மன்னார் வளைகுடா வாழ்க்கை என்னும் வலைப்பதிவில் வெளியாகியுள்ளஇக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

Tuesday, August 5, 2014

மீண்டும் மீண்டும் பிறந்தேன்

ஒரு கதை அல்லது கட்டுரை எழுதி ‌பல நாட்கள் கடந்துவிட்டது. எனது எண்ணங்களை ஏட்டில் ஏற்றி சில நாட்கள் நகர்ந்துவிட்டது. அடுத்து என்ன எழுதுவேன் , எதை எழுதுவேன் என்ற என் விசிறிகளின்  எதிர்பார்பிற்கிணங்க சுமார் கடந்த 30 நிமிடங்களாக பல விடயங்களை மனக்கண்முன் நிறுத்தி அதில் ஒரு சில நிகழ்வுகளுக்கு வரி வடிவம் கொடுத்து பலகையில் ஏற்றி விசிரிகளிடம் பகிர்ந்து பல நூறு "LIKES"களை வாங்கி, நானும் ஒரு எழுத்தாளன் என்ற போர்வைக்குள் படுத்துவிடவேண்டும் என்ற உயரிய லட்சியத்தில் எழுதிய படைப்பு இல்லை இது. என்ன எழுதுவது, எதைப்பற்றி எழுதுவது, எப்படி எழுதுவது என்ற சிந்தனை துளியும் இல்லாமல் இவ்வரிகளை கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மணிநேர சிந்தனைக்குப் பிறகும் எதுவும் உருப்படியாக தோன்றாததால், என்னை கோபமடையச்செய்த ஒரு எருமையைப் பற்றி  இங்கு கொட்டி மனதை ஆற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பக்கத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

கடிகாரத்தின் முள் மாலை ஐந்தை  தொட்டது, ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. அன்றும் வழக்கமான அலுவல்களுக்கிடையே அவ்வப்போது எனது கைப்பேசியின் திரையை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். சரி நேரம் ஆகும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு தேநீர் அருந்துவதற்காக எனது கணினியை பூட்டிவிட்டு நகர்ந்தேன். சரி ஐந்து நிமிடம்தானே என்று மிகவும் அலட்சியமாகவும், பயமேதும் இல்லாமல் தைரியமாக கைப்பேசியை எனது மேஜையின் மேலே வைத்துவிட்டு சென்றேன். எங்கே போனாலும் எப்பொழுதும் நியாபகமாய் எனது கைப்பேசியை எடுத்து செல்வது வழக்கம், ஆனால் அன்று சனி எனக்கே தெரியாமல் என் நடு மண்டையால் டிஸ்கோ அடிகொண்டிருந்ததை நான் அறியவில்லை.

நான் என் இடத்தை விட்டு நகர்ந்த இரண்டாவது நிமிடத்தில் சனி தனது வேலையை மிக சரியாக ஆரம்பித்தான். எனது பாலைப்போன கைப்பேசி மிகச் சரியாக அலைகளை பெற்று ஒலித்துக்கொண்டிருந்தது. விரைவாக தேநீர் அருந்திவிட்டு என் மேஜைக்கு அருகில் வரும்பொழுதுதான் நான் என் கைப்பேசி அலறலை கேட்டேன். நான் கைப்பேசியை தொடும் முன்பே அந்த அழைப்பு நின்றுவிட்டது. ஆம் நான் எதிர்பார்த்த என் மனைவியின் அழைப்பு நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில், அவ்வளவுதான் அலறியது என் கைப்பேசி மட்டும் அல்ல எனது மனமும் உடலுந்தான்.

அனைத்து தெய்வங்களையும் மனதில் ஒரு கணம் நினைத்துக்கொண்டு உறைந்துபோன கைகளுடன் கைப்பேசியை எடுத்து என் மனைவியின் கைப்பேசி எண்னைத் தொடர்புகொண்டேன். கைப்பேசி மணியுடன் சேர்ந்து என் மனமும் ஒலித்தது, எதிர் முனையில் என் மனைவியின் குரலும் ஒலித்தது. இக்கால கணவன்களுக்கே உரிய பவ்யத்துடன் "மானே தேனே பொன் மானே" என்றெல்லாம் டுபாகூர்விட்டு சமாளித்துவிடலாம் என்ற கானல் ஆசையுடன் நான் பேசுவதற்கு தயாரானேன். எவர் செய்த புண்ணியமோ , நான் வேண்டின தெய்வம் எண்னை இம்முறை காப்பாற்றிவிட்டது. ஆம் என் மனைவி அன்று அணிந்திருந்த உடை மிக பிரமாதம் என்று அவளுடை தோழி ஒருத்தி காலை ஒன்பது மணிக்கு தந்த பாராட்டினால் மாலை ஐந்து மணிக்கும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருந்த  காரணத்தினால் நான் அவளது கைப்பேசி அழைப்பை தவறவிட்டதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மனதிற்குள்ளேயே கடவுள்களுக்கு ஒரு பெரிய நண்றி சொல்லிக்கொண்டு அழைப்பிற்கானக் காரணத்தை அறியும் தொனியில் அவளிடம் பேசினேன்.
அன்றைய அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்து விட்ட காரணத்தினால் எண்னை புறப்பட்டு வருபடி கட்டளை இடுவதற்காக வந்த அழைப்பு என்பதை உடனே புரிந்துகொண்ட நான், என் பணிகளை முடிப்பதற்கு இன்னும் சில நேரம் ஆகும் என்பதை சொல்வதற்கு தைரியம் இல்லாத காரணத்தினாலும், அப்படியே ஏழு மலையான் புண்ணியத்தோடு தைரியத்தை வரவழைத்து சொன்னாலும் கூட அதை சற்றும் சட்டை செய்ய மாட்டாள் என்ற சத்தியத்தை நன்கு உணர்ந்த ஞானத்தினாலும் மறு வார்த்தை கூறாமல் இன்னும் பத்து நிமிடத்தினுள் உனது அலுவலக சுற்றுச்சுவர் கதவருகே இருப்பேன் என்ற உறுதி மொழியுடன் அவளிடம் இருந்து விடை பெற்று கைப்பேசி அழைப்பை துண்டித்தேன்.
மனதில் ஒரு இணம் புரியாத மகிழ்ச்சி. ஏன் இருக்கக் கூடாது? தலைக்கு வந்தது தலைப் பாகையுடன்  போனது என்பது இதுதானோ. இந்த பழமொழிக்கானக் காரணத்தை உணர்ந்தேன் அந்த நொடியில். ஆம் எண்னை போன்ற எவனோ ஒருவன் தன்  இல்லாளின் கோபமென்னும் அக்ணிக்  கணையில் இருந்து தப்பியப்பின் உதிர்த்த பல பொன் மொழிகள் என்று.

அந்த மகிழ்ச்சி தந்த உற்ச்சாகத்தில் எனது இரண்டு சக்கர வாகணத்தின் இயக்கி பொத்தானை அழுத்தி இரண்டே நிமிடத்தில் ஏன் அலுவலக முக்கிய வாசலினை கடந்தேன். பொதுவாக 7 நிமிடப் பயண தூரத்தில்தான் இருக்கிறது என்னவள் பணிபுரியும் அலுவலகம். நான் பத்து  நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லி இருந்த காரணத்தினால் எந்த ஒரு படபடப்பும் இல்லாமல் "என்றென்றும் என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்" என்று அலைபாயுதே படத்தில் வரும் பாடலை அசைப்போட்டுக்கொண்டு வாகணத்தை இயக்கிகொண்டிருக்கும் தருணத்தில் மனதில் ஒரு இணம் புரியாத பயவுணர்வின் ஆர்ப்பாட்டதை உணர்ந்தேன்.

வாகணத்தின் முகப்பு விளக்கினை ஒளிவூட்டுவதற்கான பொத்தானை தேடியபொளுதுதான் கவனித்தேன் எனது இரு சக்கர வாகணத்தின் எரிபொருள் இன்னும் சற்று நேரத்தில் உறங்கி விடும் என்று. எண்ணவளின் அலுவலகமோ இன்னும் இரண்டு நிமிடப் பயண தொலைவில்தான் உள்ளது. ஏற்கனவே ஐந்து நிமிடம் கடந்த விட்டது, ஆனால் இன்னும் ஐந்து நிமிடம் இருகின்றதே என்ற தைரியத்தில் மிகவும் மன உறுதியுடன் அருகில் உள்ள ஏறிபொருள் நிரப்பும் கிடங்கிற்கு சென்று வாகணத்தின் பசியை முழுவதும் ஆற்றிவிட்டு அங்கே இருந்து கிளம்புவதர்க்குள் மூன்று நிமிடங்கள் கரைந்தன.

எப்படிப்  பார்த்தாலும் சரியாக இன்னும் இரண்டு நிமிடத்தில் நான் குடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடலாம் என்ற நேர்மறைச் சிந்தனையினால் எனக்கு நானே ஒரு சாபாஷ் சொல்லிக்கொண்டு வானகனத்தை விரைவாக செலுத்தினேன். வாகணத்தின் வேகத்தை கூட்டும் முன்பே ஒரு நாட்டு எருமை மிகச் சரியாக அதன் பின் புறத்திணை கொண்டு என் வண்டியினை வழிமறித்த காரணத்தினால் நான் சற்று நிலை தடுமாறி வாகனத்தோடு சரிந்தேன். நல்ல வேலையாக சிறிய சிராய்ப்புகளுடன் தப்பித்தேன். எப்பொழுதும் மிதமான வேகத்தில் செல்லும் பழக்கம் உள்ளதனால் என்னால் சமாளிக்க முடிந்தது, ஆனால் இந்த உலகமோ நான் தப்பித்து என் மனைவியின் மாகல்ய பாக்கியம் என்று அந்தப் பெருமையையும் அவளுக்கே தந்தது. இதுவே எதாவது விபரிதம் நடந்திருந்தால் "மென்பொருளில் வேலை செய்யும் வாளிபன்தானே, எவளோ ஒருத்தியின் நினைவில் வண்டி ஓட்டிவந்து இப்படி விழுந்துவிட்டான்" என்று வசைப் பாடி ஒரு சிற்றின்பம் அடைந்திருக்கும், என்ன செய்வது ஆண் மகனாக பிறந்தாளே இதையெல்லாம் அனுபவித்தே ஆகவேண்டும் போல. அதுவும் மென்பொருளில் வேலை செய்யும்  ஆண் என்றால் சொல்லவேத் தேவையில்லை! உலகில் உள்ள அனைத்துப் பலிகளையும் சுமந்தே ஆகவேண்டும் என்ற உலக நியதியை நினைத்து நொந்துகொண்டே எனது வண்டியை மீண்டும் இயக்க முனைந்தேன்.
சுயநினைவிர்க்கு வந்தவுடன்தான் நியாபம் வந்தது விபத்தில் தப்பியது பெரிதில்லை இனிமேல்தான் வரப்போகிறது பெரிய கண்டம் என்று. ஆம் காலத்தின் வாய்தனில் பத்து நிமிடங்கள் அறைந்துவிட்டான. நக்கீரன் போல் வந்ததே கோபம் எனக்கு, என்ன செய்வது அந்த எருமைக்கு மணைவி இருக்குமாயின் என் மனவேதனை புரிந்திருக்கும், என்னைத் தூக்கி கொண்டு மிக வேகமாக என் மணையிடம் சேர்த்திருக்கும். போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கும் போல், இஜ்ஜென்மத்தில் எருமையாக பிறப்பதற்கு.    

சரி நடப்பது நடக்கட்டும், எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு வேலை சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு துணிக்கடைக்கோ    அல்லது முக அலங்காரம் அகாடிக்கோ கூட்டிச்சென்று சமாளித்துவிடலாம் என்று ஒரு என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டு அவளின் அருகே சென்று அசைய முடியாமல் அசையாது போல் நடித்துக்கொண்டே வாகனத்தினை நிறுத்தி கீழ் இறங்கினேன். நான் நினைத்ததுபோன்றே மிகவும் சூடான எண்ணையில் விழுந்த காடுபோல் அவளது நெஞ்சம் பொரிந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் காதில் கேட்பதற்கு வேண்டுமானால் "ஏன் இவ்வளவு தாமதம்"  என்கிற வார்த்தை  மிக சாதாரணமாக இருக்கலாம் ஆனால் மணைவியை அழைக்கப்போகும்  ஒவ்வொரு கனவனுக்கும்  மட்டுமே தெரியும் அந்த சொல்லின் வலிமையையும் வீரியமும்.

நான் வேண்டும் என்றே நேரம் கடத்தவில்லை, நான் சொல்வதற்கு தயவுகூர்ந்து இரண்டே இரண்டு நிமிடம் குடு குட்டிம்மா, புஜ்ஜி, பட்டு என்று இன்னும் சில செல்ல மொழிகள் உதிர்த்த பின்பு, நடந்தவற்றை கூறினேன். ஏன் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக அவளிடம் கோபம் சற்றே அதிகமாக தலைதூகிற்று, "எருமை கண்ணு தெரியவில்லை" என்று அவளின் பட்டுதடுகளின் வழியே வழிந்தது வசைத்தேன். ஆம் ஒவ்வொரு ஆணும் அவன் மனைவியின் வசையைக்கூட தேனாகவே சுவைக்கின்றான் திருமணமான புதிதில். மன்னித்துவிடு சரியாக கவனிக்கவில்லை என்று நான் கூறியதுதான் தாமதம், அய்யய்யோ நான் உங்களை எருமை என்று சொல்லவேணா; கடவுளே! கடவுளே. நான் எருமைக்கு சரியாக கண்ணு தெரியவில்லை என்று சொன்னேன் என்று சிலேடையில் முடித்தால். எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டோம் என்று மறு மூச்சு விட்டு அங்கே இருந்து என்னவளை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தேன். நல்ல படியாக வீடு சேர்ந்தாலும் மணம் உறங்க மாறுகிறது, அந்த எருமையை ஏதாவது செய்ய வேண்டும் என்று புலம்பலாயிர்று.

கடவுளை வேண்டிக்கொண்டு "அடுத்த ஜென்மத்தில் நீ ஒரு மனிதனாக பிறந்து, மணைவி பெற்று நான் அடைந்ததை நீயும் அடைவாய்" என்று அந்த எருமைக்கு சாபமிட்டுக்கொண்டு என்மனதின் கோபத்திற்கு சமாதி கட்டி உறங்கினேன்.

யாருக்குத் தெரியும், போன ஜென்மத்தில் யார் விட்ட சாபமோ இஜ்ஜென்மத்தில் நான் மனிதனாக பிறந்ததற்கு.  

Tuesday, July 29, 2014

அப்பா என்கிற மனிதன்

குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைபாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன்.

பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேனுமேன்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.

சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாப்பாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது.

எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது.

கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதொடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.

மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்ப்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்ப்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை.

மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.
அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.

மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்ப்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.

எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.

எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?
சிறுவயது முதலே தாயுடன் ஏப்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாயிற்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது.

ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனமரமாய் நின்று போகிறது.தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...