Tuesday, November 3, 2015

தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும்


 
தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும்

      ஒரு மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப் பயன்படும் அரிய கருவி மொழியாகும்.  மனிதனின் அறிவு விரிவாக விரிவாக மொழியும் வளர்ச்சிப் பெற்றுக்கொண்டே வருகின்றன.  மொழி இல்லையேல் மனிதனுக்கு இயக்கம் என்பது இருக்காது.  ஆகவே மொழியே மனித வாழ்வினைத் திறம்படவும் செம்மையுறவும் வைக்கின்றது.  அவ்வகையில் செம்மையான மொழி வளத்தைப் பெற்ற மனித இனமே சிறப்பான வாழ்வினை வாழ்ந்து வருகின்றது.  அவ்வாறு சிறப்பும் செம்மையும் வாய்ந்த மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று.  தொன்மைத் தன்மை பெற்ற மொழியும் தமிழ் மொழியே என்பதனை அறிய முடிகின்றது. இதனை,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி
என்ற வரிகள் புறப்பொருள் வெண்பாமாலையின்வழி புலப்படுத்துகிறது.  மேலும் பாட்டுக்கொரு புலவன் பாரதியும் தமிழின் தொன்மையைப் பற்றிக் கூறியுள்ளதையும் அறியமுடிகின்றது.  தமிழ் மொழியானது தொன்மைத் தன்மையினைக் கொண்டு தொன்னெடுங்காலமாக தனக்கே உரிய தனித் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகின்றது.  இதனை,
தொன்று நிகழ்ந்த தனைத்தும்
அறிந்துள தொல்புவி வாணர்களும்
என்று பிறந்தவ ளென்றுணராத
இயல்பின ளாமெங்கள் தாய் (பா.க., ப.9-135)
என்ற வரிகள் உணர்த்துகின்றன.

தமிழின் தொன்மையும் தனிச்சிறப்பும்
      தமிழர்கள் தொன்மையுடையவர்கள் என்பதால் தமிழ் மொழியும் தொன்மையுடையதாகத்தான் இருக்க வேண்டும்.  தமிழ் மொழி வரலாற்றிற்கு எட்டாத ஆதிகாலத்தே தோன்றிய மொழியாகும்.  இம்மொழியின் தோற்றம் தெரியாத காரணத்தால் இது சிவபெருமானால் அகத்திய முனிவருக்குக் கற்பிக்கப் பெற்றது என்றும், ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டு காலத்திற்கு முன்பே இம்மொழி உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்ந்தது என்ற கருத்தும் உண்டு.  இம்மொழி இலக்கிய இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புற விளங்கியும் வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
பழந்தமிழ்ச் சங்க நூல்களில் தமிழ், தமிழகம் என்னும் சொற்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன.  ஆரிய மக்கள் தமிழ் என்னும் சொல்லை உச்சரிக்க முடியாமல் உறுதுயரடைந்துள்ளனர்.  ஆகையால் தமிழ் என்னும் இன்சொல் தமிழறியார் நாவில் தமிளாகி பிறகு திரமிள் என்றாகி அதன் பிறகு திராவிடமாகத் திரிந்திருக்க வேண்டும்.
      தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தியதை,
தமிழென் கிளவியும் அதனோரற்றே      (தொல். எழுத்து. 186)
என்னும் நூற்பாவின் மூலம் அறியலாம்.  எனவே மொழியைக் குறிப்பதற்கும் நாட்டைக் குறிப்பதற்கும் தமிழ், தமிழகம் என்னும் சொற்களே இருந்திருக்கின்றன. இவ்வுண்மைகளிலிருந்து திராவிடர் என்பவர்களே பழந்தமிழரென்றும், திராவிட மொழி என்பது பழங்காலத் தமிழ் மொழியே என்றும், திராவிடம் என்பது பண்டைத் தமிழகம் என்றும் அறியப்படுகிறது.  அவ்வகையில் இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்று தொன்றுதொட்டு வரும் தொன்மையான மொழிகளாவன தமிழ் எபிரேயம், இலத்தீன்,சமகிருதம், கிரேக்கம் ஆகிய ஐந்து மொழிகளாகும்.  இவற்றுள் இன்றைக்கும் உயிர்ப்புடனும் உலக வழக்குடனும் பேசப்பட்டும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்ற ஒரே மொழி தமிழ் மொழி என்பதை அறியமுடிகின்றது.
      இந்திய மொழிகளுக்கிடையே நிலவும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூர்ந்து நோக்கிய மொழி நூல் வல்லுநர்கள் நாட்டின் வடபாகத்தில் வழங்கப்படும் மொழிகள் ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும், தென் பாகத்தில் வழங்கப்படுவது திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் பிரித்தனர். அதன் அடிப்படையில் தமிழ் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.  திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பிற மொழிகள், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடுகு அல்லது கூர்க்கு, துதம் (கூரனடி), கோதம் (முடிவய), கோண்டு (ழுடினே), சந்தம் அல்லது கு (முடினே) ஓராவோன், இராஜ்மகால் ஆகியனவாகும்.  இவற்றுள் முன்னைய ஐந்தும், தமிழும் திருந்திய மொழிகள், பின்னைய ஆறும் திருந்தா மொழிகள் இம்மொழிக் குடும்பத்திற்குத் தலைமை நிலையிலிருக்கும் தகுதியைப் பெற்றது தமிழ்மொழி ஆகும் என்பதனை வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடுகிறது (வாழ். களஞ்., தொ. 10, ப. 733).
      மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகள் தமிழ்த் தாயின் பிள்ளைகளெனப் போற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்காணும் வரிகள் மூலம் சுட்டுவதை அறியலாம்.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினு மோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்    (மனோன். 2:6)
என்ற பாடல் வரிகளின் மூலம் தமிழ்மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.  ஆரியமொழிக் குடும்பத்தின் உதவியின்றித் தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்றது.  ஆனால் மற்ற மூன்று மொழிகளுக்கும் ஆரிய மொழியின் சார்பானது அவசியமாகக் கொள்ளப்பட்டது என்பதனையும் அறிய முடிகின்றது (அந்தோணிசாமி, சே.ச., 2006:1).
      தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை விளக்கும் ஹிராஸ் அடிகளார் வட இந்தியாவில் காணப்பட்ட மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழி ஒன்றைப் பேசினர்.  அம்மொழியில் பயன்படுத்தப்பட்ட சொற்களில் பெரும்பகுதி தமிழைச் சேர்ந்தவை என்று கூறுவதோடு இன்று பழமையானது எனக் கொள்ளப்படும் சுமேரிய மொழியும் தமிழுக்குப் பிந்திய வளர்ச்சியைப் பெற்றது என்ற கருத்தை குறிப்பிடுவதிலிருந்து தமிழின் தொன்மைச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது (ஞானபிரகாசர் அடிகளார், எ., 2006:5).
      மேலும் தமிழ் ஆங்கில அகராதியைப் படைத்த வின்சுலோ என்னும் அறிஞரும் தமிழின் சிறப்புக் குறித்து கூறியுள்ள செய்தியில் இருந்து அறிய முடிகின்றது.  பாட்டு வடிவத்தில் கிரேக்க மொழியைவிடத் தமிழ் உயர்ந்துள்ளது.  ஆற்றலிலும் முழுமையிலும் ஆங்கில மொழியையும், ஜெர்மானிய மொழியையும் ஒத்துக் காணப்படுகின்றது என்றும், மனிதரால் பேசப்படும் வளமான திருந்திய மென்மையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும் என்று டெய்லர் என்னும் அறிஞரும் தமிழின் பண்பட்ட பாங்கினையும் இலக்கியச் சிறப்பினையும் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகின்றது.
      தமிழ் மொழியானது சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றலிலும் பொருளோடு பொருந்தி உள்ளத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் தமிழுக்கு இணையான மொழி உலகில் வேறொன்றும் இல்லை.  தமிழ் மொழியில் பொருள்களின் கருத்து, செயல், அதன் விளைவுகள் ஆகியவற்றின் முறை எப்போதும் மீறப்படாமலேயே காக்கப்படுகின்றது என்ற செய்தியினையும் தெரிந்துகொள்ள முடிகின்றது.      இத்தகைய உண்மைகளை அறிந்தமையால் தாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல இனிதானதொன்றை எங்கும் காணமுடியாது என்ற முடிவுக்கு வந்த பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கருத்தின் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.

தமிழ் மொழியின் தொன்மைப் பற்றி கால்டுவெல்
      திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆசிரியரான கால்டுவெல் என்னும் மொழிநூல் அறிஞர் தமிழ் மொழி மிகத் தொன்மையுடையது என்பதற்குப் பல காரணங்களைக் காட்டியுள்ளார்.  இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே இருக்கும் பெரும்பான்மையான வேறுபாடுகள் மொழியின் தொன்மையைக் காட்டுகின்றது.
      செந்தமிழ் இலக்கணப் பாகுபாடும் மொழியின் தொன்மைக்குச் சான்றாகும்.  ஒரு மொழியில் இலக்கியங்கள் தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகே அம்மொழியில் இலக்கணம் தோன்றியது எனக் கூறுவதற்கேற்ப தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கிற முதல் நூலே இலக்கண நூலாகிய தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த இலக்கியங்களெல்லாம் கடலலைகளுக்கு இரையாகிவிட்டன.   எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களும் தொன்மைக் காலத்தே நம் மொழியில் தோன்றித் துலங்கின என்பதும் அறியமுடிகிறது.
      மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படும் சாசனங்களில் பல, மிகத் தொன்மையான காலத்தில் வடமொழிக் கலப்பற்ற செந்தமிழ்ச் சொற்களால் ஆனது. தமிழகத்தில் காணப்படும் சமகிருத சாசனங்கள் ஒன்றுகூட கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது கிடையாது என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கா.கோவிந்தன் என்பவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (தமிழில்) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகின்றது (கோவிந்தன், கா., 1992:21). முச்சங்கங்களும் மொழித் தொன்மையும்
      கி.மு. 5000 ஆண்டிலிருந்து கி.பி. 300 வரைக்கும் தலை, இடை, கடைச் சங்கங்களை முறையே தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், கூடல் மாநகரிலும் நிறுவிப் புலவர்களைக் கொண்டு பாண்டியர்கள் தமிழை ஆய்ந்து வந்தார்கள். இலக்கிய,இலக்கணங்களை வளப்படுத்தி வெளிக் கொணர்ந்தார்கள்.  அக்காலச் சங்கங்கள் இக்காலப் பல்கலைக்கழகங்கள் போல் விளங்கின.  அவற்றில் மொழியை ஆராய்ந்து எழுத்துக்களின் பிறப்பைப் பற்றியும், அவற்றின் ஒலி நயங்களைப் பற்றியும்,சொற்களைப் பற்றியும், அவற்றின் பிரிவுகளைப் பற்றியும் பல உண்மைகளை உணர்ந்து எடுத்துரைத்துள்ளார்கள்.  ஒரு மொழி பண்பட்ட நிலையை அடைந்த பிறகு தான் ஆற்றல் வாய்ந்து அதில் ஆராய்ச்சி நடத்துவது இயலும்.  ஆகவே, தமிழ்மொழி கி.மு. 5000க்கும் முன்பே பண்பட்ட மொழியாக விளங்கியதனால் தான் சங்கம் வைத்து ஆராயந்திருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது.
தமிழின் தனிச்சிறப்பு
      ஆரிய மொழிபோல் உலக வழக்கு அழிந்து, ஒழிந்து, சிதையாமல், சீரிளமை குன்றாமல் இருக்கும் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழியாகும்.  இம்மொழி கலைமகட்கு வலது விழியாக விளங்குகிறதென்று மனோன்மணீய ஆசிரியர் பின்வரும் வரிகளின் மூலம் விளக்குவதைக் கொண்டு அறியமுடிகின்றது.
கலைமகள் தன் பூர்வதிசை
காணுங்கால் அவள் விழியுள்
வலது விழி தென்மொழியா
மதியாரோ மதியுடையார்
என்ற வரிகளின் வாயிலாகக் கிழக்குத் திசை தெரியாதவர்கள் தாம் வடமொழியைக் கலைமகளின் வலவிழி என்பர்.  ஆனால் அறிவுடைய பெருமக்கள் கலைமகள் கிழக்கு முகமாகத் திரும்பியிருக்கின்றாள் என்று கூறுவதால் தமிழ்மொழியே அவளுக்குரிய வல விழியாக விளங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.  (கணேசன்,பி.சி., 1996:211)

பாரதி கூறும் தமிழின் சிறப்பு
      பாரதியார் பன்மொழிப் புலவராவார்.  அவர் தமிழ்மொழிதான் தாமறிந்த மொழிகளிளெல்லாம் தலையானது, தனிச் சிறப்புடையது தணியா இன்பம் பயக்கவல்லது என்றும், தமிழை நினைத்தாலும் இன்பம்பேசினாலும் இன்பம்,கேட்டாலும் இன்பம், தமிழே இன்பம், செந்தமிழ் நாடென்று சொன்னாலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றும், தமிழ் மொழியின் சிறப்பும் தன்மையும் குறித்து வாழ்த்தி வணங்கியுள்ளமையை அறியமுடிகின்றது.
வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே (பா.க., ப. 154)
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பகருஞ்சிறப்பு
      இனிமை பயப்பது தமிழ்மொழி, நல்லின்பம் தருவது தமிழ்மொழி, சுவைமிகு செம்மைச் சொற்கள் நம் தொன்மைத் தமிழினில் பல உள்ளன.  தமிழைத் தம்முயிராகப் பேணிய பாரதிதாசனார் கூறும் சிறப்புக் குறித்துப் பாரதிதாசன் கவிதை வரிகள் விளக்குகின்றன.
இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பந்தரும்படி வாய்த்தல் நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்ட தில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்
என்னும் வரிகள் மூலம் தமிழின் சிறப்புக் குறித்துப் பாரதிதாசன் கூறுவது புலப்படுகின்றது (பா.தா.க., ப.82:23)


இலக்கணங் காட்டும் தமிழ்ச் சிறப்பு
      அவசரக்குடுக்கை, அதோகதி, ஆகாயத்தாமரை, ஆயிரங்காலத்துப் பயிர்,இந்திரசாலம், ஓலைகிழிந்தது, தாளம் போடுகிறான்நாமம் போட்டுவிட்டான்,புத்தகப்பூச்சி போன்ற மரபுத்தொடர்களாலும் ((idioms) ஓட்டமும் நடையுமாய்,தட்டுத்தடுமாறி, கொள்ளை கொள்ளையாக நன்மைதீமை, மேலும் கீழும் போன்ற இனிய சொற்றொடர்களாலும் (phrases)  தமிழ்மொழி சிறப்புடன் திகழ்கின்றது.  நம் மொழியில் காணும் பலவகையான தொகைகள் சொற்சுருக்கத்துக்கும்,சொல்லினிமைக்கும் பெரிதும் பயன்படுகின்றன.  கபிலரும், பரணரும் என்பதைக் கபிலபரணர் என்று சொல்லும்பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. மொழிநூல் வல்லார்கள் தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டுநிலை என்று மொழிகளின் நிலைகளைப் பாகுபாடு செய்துள்ளார்கள்.

      தமிழ் மொழி ஒட்டுநிலையைக் கொண்டது.  அடிச்சொல் இரண்டும்பலவும் ஒட்டி நிற்கும் நிலை ஒட்டுநிலை, கண் + அன் என்னும் சொல் சேர்ந்து ஒட்டுவதால் கண்ணன் என்னும் சொல் கிடைக்கிறது.  இவ்வாறு பகுதிவிகுதி, இடைநிலை,சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றை ஒட்டித்தான் தமிழ்ச் சொற்களை உண்டுபண்ணவும் இடைநிலைகளாலேயே காலங்களை அறியவும் முடிகின்றது.  தமிழின் திணைப் பாகுபாடும் எண் பாகுபாடும் போற்றற்குரியன. உலகிலுள்ள பொருட்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் பிரித்து,
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே (தொல். சொல். 1)
என்று வரையறுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.  தமிழில் ஒன்றை ஒருமையென்றும்,ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பன்மையென்றும் கூறுகின்றனர்.
      உலக மொழிகளுக்கு இல்லாத ஒலிச்சிறப்பு நம் மொழிக்கு உண்டு. வல்லோசையென்றும் இடையோசையென்றும், மெல்லோசையென்றும், நம் மொழியொலியைப் பிரித்திருக்கிறோம்.  இச்சிறப்பைப் பற்றி மு.வரதராசனார் தமிழ் மொழியின் ஒலிகள் எல்லா உறுப்புக்களுக்கும் அளவான உழைப்புத் தருவனவாக உள்ளன.  அதனால், தமிழ் ஒலிகளில் பயின்றவர் ஒலி உறுப்புக்கள் எல்லாவற்றிற்கும் பயிற்சி தந்தவராய் இருத்தலால் பிற மொழிகளைக் கற்க முயலும்போது அவற்றின் ஒலிகளை எளிதில் ஒலிக்க வல்லவராக இருக்கின்றனர் என்று தமது மொழிநூலில் கூறுகின்றார் (வரதராசனார்மு., 1996:289).

தமிழைப் பற்றி சான்றோர்களின் கருத்துக்கள்
      சங்கத் தமிழ் மூன்றுந் தா என்று ஔவையாரும், இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்று பிங்கலநிகண்டும், பழங்குடி என்னும் சொல்லை விளக்கும்பொழுது சேர, சோழபாண்டியர் என்றன போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி தமிழ்க்குடி என்று பரிமேலழகரும்,
பழுதற்ற முத்தமிழின் பாடற்குரையின்
றெழுதத் துணிவதே யான் (சிலப். உரை. பா. 8)
ஒருந் தமிழொரு மூன்றும் உலகின் புறவகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரம்                                           (சிலப். பா. 2)
என்று அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைப் பாயிரத்திலும் தமிழ் பற்றியக் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
      தமிழ் எழுத்துக்கள் கூடிய வரையில் முற்போக்காக அமைந்த எழுத்துக்களே சீன,அரபி, சப்பான் முதலிய எழுத்துக்களைப் போல் புள்ளிகளும், நுண்கோடுகளும் மிகுந்தவை அல்ல. உயிர் எழுத்து பன்னிரண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகச் சுருங்கிய அளவில் முப்பது எழுத்துக்கள் உடையது தமிழ்.  அந்த முப்பது எழுத்துக்களும் தெளிவான வடிவ வேறுபாடு கொண்டவை.  பிறர் சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதற்கும், சுலபமாக அச்சுக் கோர்ப்பதற்கும் தமிழ் எழுத்துக்களில்சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன் என்று தந்தை பெரியாரும் தமிழ்மொழிப் பற்றிக் கூறியுள்ளதை அறியமுடிகின்றது. (கணேசன், பி.சி., 1996:15).
      மொழி மக்களின் செல்வம், அவர்தம் உணர்வின் ஊற்று, வாழ்வின் நீரோட்டம்,அறிவுப்பயிர் செழிக்கும் நாற்றங்கால், உயிர்கள் தழைக்க இன்றியமையாதது மழையெனில் மனித இனங்கள் தழைக்க இன்றியமையாதது அவர்தம் மொழி. தமிழர் வாழ்வுக்கு விழியுமாவது தமிழ் என்று அறிஞர் அண்ணா தமது கருத்தை வெளிக்காட்டியுள்ளது புலப்படுகின்றது.
      (இ) டம்பத்துக்கு இடம் அளிக்காதது.
      ஆரவாரம் பெருக்காதது
      ஆற்றல் வீணாகத் தேவையற்றது
      உள்ளது உள்ளவாறு உணர்த்தும் திறத்தது
      வீண்காலச் செலவுக்கு இடம் அளிக்காதது
      பயில்வதற்கு எளிதானது
      பொருள் அறிதற்கு எளிதாயது
      பாடுதற்கு இனிமை பயப்பது
      வழிபடுவோர் துதித்தற்கு இனிமை பயப்பது
      சாகாக் கல்வியை உணர்த்தும் திறமுடையது
      திருவருள் வலத்தால் வாய்த்ததெனப் போற்றப்படுவது தமிழ் என்று இராமலிங்க அடிகளார் தரும் கருத்தும் சிறப்புக்குரியதாகும்.   
      தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை.  இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால்தான் தமிழ் அழிந்துபோகாமல் இருக்கிறது.  தமிழ் மரபியல் கொண்ட மொழி.  தமிழ் வழிவழியாக இளமையோடு வழங்கி வருகிறது.  தமிழ் எந்தக் காலத்தும் அழியாது தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தானாகவே அழிந்து போவார்கள்.
      இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால் இயற்கையை யாராலும் அழிக்க முடியாது.  ஆகவே தமிழையும் அழிக்க முடியாது என்று மறைமலை அடிகள் தமிழ்ப் பற்றித் தரும் கருத்தை அறியமுடிகின்றது.
      உலகத்திய மொழிகளில் மிகத் தொன்மை வாய்ந்தது தமிழே என்று குஞ்சன்பிள்ளைச்சட்டம், பி.சாமி அவர்களும் தமிழ்மொழிப் பற்றித் தரும் கருத்தை அறிந்துகொள்ள முடிகின்றது.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...