இமய மலை இந்திய துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர்.
உலகத்தின் ஒப்பற்ற மிகப்பெரிய மிகவுயர்ந்த மாபெரும் மலைத்தொடர் நம் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் சாதனை பயணம் செய்வோரின் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும்.
இமயமலை உலகத்திலேயே இளம் மலைத் தொடர்களில் ஒன்றாகும். இது 2,400 கிலோ மீட்டர் நீளமும், 160 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய மலை உலகில் வேறு எங்கும் இல்லை. இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின் படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால்தான் இது உருவாகியது. இதனால் தான் மடிப்பு மலை என்று இதை கூறுகிறோம் .
வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது,
இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து கொண்டே வருகிறது.
மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது தான். இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகருமாம்.
இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகளில் நுழைவதால் இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
இமய மலைப் பகுதிகளில் உணர முடியாத நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இமய மலைப் பகுதிகள் கடினமான பாறைகளை கொண்டிருப்பதாலும், வளைந்து வளைந்து மலைகள் இருப்பதாலும், பல நேரங்களில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல நில நடுக்கங்கள் நிகழ்வதுண்டு. இந்த நிலநடுக்கங்கள் எந்த கருவியிலும் பதிவாவதில்லை. மேலும், இமய மலையின் பூமிக்குள் ஏற்படும் நிலநடுக்கங்களால் பூமி பிளவுபடுவதும் இல்லை. இதை ‘பிளைண்ட் த்ரஸ்ட்’ என்கின்றனர்.
ஆனால், உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில், 1255 மற்றும் 1934-ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
1934-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமியில் சுமார் 150 கி.மீ. தூரம் பிளவு ஏற்பட்டது. பூமி பிளவுப்படும் வகையில் ஏற்படும் நிலநடுக்கத்தை ‘மெயின் பிரான்ட்டல் த்ரஸ்ட்’ என்றழைக்கின்றனர். இதுபோன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து நிகழலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இமய மலையின் ரகசியங்கள் இன்னும் ஏராளம் உள்ளனவாம்.