Friday, January 8, 2016

தந்தை ஆவதற்கான தகுதி என்ன?

கேள்வி என் மீது மிகுந்த பிரியம் வைத்திருப்பவர், என் அப்பா. ஒரு குறையும் வைத்ததில்லை. என் அம்மாவுக்கு நான் பிறந்து, அவள் விதவையான பின், அவளை மணந்து கொண்ட இரண்டாவது கணவர் அவர் என்று அண்மையில்தான் எனக்கு உண்மை தெரிந்தது. அவருக்குப் பிறந்தவன் அல்ல என்று தெரிந்தபின், அவருடன் பழைய நெருக்கத்தோடு பழக முடியாமல் தவிக்கிறேன். எப்படி இதைச் சரிப்படுத்துவது? சத்குரு: சரிப்படுத்த வேண்டியது உங்கள் மனநிலையைத்தான்! மனித உறவுகள் மேம்பட்டிருக்க ஏதாவதொரு ரத்தத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள். எத்தனை விருப்பத்துடன் அன்பைப் பொழிகிறீர்கள். எப்படி கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் எந்த உறவும் அமையும். மனித உறவுகள் வெறும் உடல் ரீதியானவை அல்ல, உணர்வு ரீதியானவை. இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவராக உங்கள் அப்பா நடந்து கொண்டு இருக்கிறாரே, அதை நினைத்து முதலில் சந்தோஷப்படுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள். எத்தனை விருப்பத்துடன் அன்பைப் பொழிகிறீர்கள். எப்படி கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் எந்த உறவும் அமையும். மற்ற எத்தனையோ பேருக்குக் கிடைத்ததைவிட அற்புதமான தந்தை உங்களுக்குக் கிடைத்திருக்கிறார். அதைக் கொண்டாடுவதை விடுத்து, இடைவெளி விழுந்துவிட்டதாக நினைப்பதே தவறு. பொதுவாக, ஒருவருக்குப் பிறக்கும் குழந்தையை அவர் தேர்ந்தெடுக்க முடியாது. அது அவருடைய சட்டதிட்டங்களை மீறியது. தன்னிச்சையாக அவர் மடியில் வந்து விழும் உயிர் அது. சங்கரன்பிள்ளை விமானத்தில் பயணம் செய்தார். உணவு நேரம் வந்தது. விமானப் பணிப்பெண் ஒவ்வொரு இருக்கையாக ஓர் அட்டையை நீட்டி, அதில் டிக் அடிக்கச் சொல்லியவாறு வந்தாள். பல உணவு வகைகளில் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த அட்டையை வாங்கிய சங்கரன்பிள்ளை திகைத்தார். அதில் தேர்ந்தெடுக்க ‘வேண்டும், வேண்டாம்’ என்று இரண்டே சொற்கள்தான் இருந்தன. தங்களுக்குப் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளை இப்படித்தான் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பிறந்ததும், அது தன்னுடையது என்ற பெருமை அதன் மீது பற்று வைக்கச் சொல்கிறது. தன்னுடைய உடைமையாக, உரிமை கொண்டாட முடிந்தால் மட்டுமே ஒருவரைச் சொந்தம் என்று நினைக்கும் பெரும்பாலானவர்களுக்கு மத்தியில், தனக்குப் பிறக்காத ஒருவரைத் தன் மகன் போலவே நினைத்து, உங்கள் மீது அன்பும், பாசமும் பொழிந்து வந்திருக்கும் உன்னதமானவரை நீங்கள் அந்நியப்படுத்திப் பார்க்காதீர்கள். உலகில் மற்றெந்த உறவுகளையும் விட தாய்மை மிகவும் போற்றப்படுவதற்குக் காரணம் என்ன? சில மாதங்களுக்குத்தான் என்றாலும், மற்றொரு உயிரைத் தன்னுடைய ஒரு பகுதியாகவே ஏற்று, தன் உயிராக தனக்குள்ளேயே இணைத்துக் கொள்ளும் உன்னதம் அது. கர்ப்பக்காலத்தில், பெண்கள் மிக அழகாக மிளிர்வதற்குக் காரணம் அந்த உணர்வுதான். இன்னொரு உயிரைத் தன்னுயிராக ஏற்கும் நிலைதான் யோகாவின் நோக்கம். ஒவ்வொரு தாயும் கவனத்துடனோ, கவனமின்றியோ, யோகாவை அனுபவித்துவிட இயற்கை கொடுத்த வரம் இது. ஓர் அன்னைக்கு மட்டுமே உரித்தான இந்த மகத்தான குணத்தை ஓர் ஆணிடம் காண்பது அரிது. இனக்கவர்ச்சி காரணமாக உங்கள் அன்னையை மட்டும் விரும்பி ஏற்று, உங்கள் மீது அன்பு பொழியாமல் விடவில்லை உங்கள் அப்பா. ஒரு குழந்தை வளர்வதற்கான சரியான சூழலை அமைக்கத் தவறிவிட்டு, குழந்தையை உற்பத்தி செய்து பூமியில் எறியும் பல தந்தைகளைப் போன்றதா உங்கள் அப்பாவின் செயல்? இல்லை. அவர்களுடைய இனச் சேர்க்கையின் விபத்தாகப் பிறந்தவரல்ல நீங்கள். உயிர் அணுக்களைத் தந்தவர் என்ற காரணம் கூட இல்லாமல், உங்களை உங்களுக்காகவே ஏற்றுக் கொண்டு இருக்கிறாரே, அது எப்பேர்ப்பட்ட மேன்மையான செயல்! இவருடைய வாழ்க்கையில் நான் விபத்தாக வந்து சேர்ந்தவனல்ல, இவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற எண்ணம் தரக்கூடிய மகிழ்ச்சிக்கு இணை ஏது? பள்ளியிலிருந்து திரும்பிய மகனை அம்மா கேட்டாள்: “இன்றைக்கு என்ன சொல்லித் தந்தார்கள்?” “எழுத சொல்லித் தந்தார்கள் அம்மா” “அட என் செல்லமே, நீ என்ன எழுதினாய்?” “தெரியாதே.. இன்னும் அதைப் படிப்பதற்கு சொல்லித் தரவில்லையே?” தந்தையின் ஆதரவற்றுப் போயிருக்கக்கூடிய உங்களை ஏற்றுக் கொண்டதைப் புரிந்து கொள்ளத் தெரிந்த உங்களுக்கு, அதன் மேன்மையைப் புரிந்து கொள்ளத் தெரியாதிருப்பது இப்படித்தான் இருக்கிறது. இன்னொரு உயிரை உங்களில் ஒரு பகுதியாக ஏற்பதால்தான் காதல்கூடப் பரவசம் தருகிறது. காதலில் ஆனந்தம் வருகிறது. குழந்தையோ, மனைவியோ, கணவனோ, நண்பனோ விபத்தாக வந்து சேர்வதைவிட முழுமையான கவனத்துடன், வேறொரு உயிரை விரும்பிச் சேர்த்துக் கொள்வது மிக மேன்மையானது. நிபந்தனையற்ற அன்பு என்பது ஒருவர், இருவர் என்றில்லை உலகின் மொத்த ஜனத்தொகையையும் உங்களுடையதாக ஏற்கும் அளவு விரிவானது. இதுதான் யோகாவின் முதல் அடி. இது நீங்கள் மறக்காதிருக்க வேண்டிய ரகசியம்!

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...